தற்போதைய செய்திகள்

கூட்டுறவுத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி – அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளுர்

திருவள்ளுர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், பூனிமாங்காடு ஊராட்சி, கோதண்டராமபுரம் காலனியில், கூட்டுறவுத்துறை சார்பாக, அம்மா நகரும் நியாய விலைக்கடையினை ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய கொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

2020-21-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, முதலமைச்சரால் தமிழகம் முழுவதும் 3501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை ரூ 9.66 கோடி மதிப்பீட்டில் துவக்கி செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, முதலமைச்சர் 21.09.2020 அன்று தலைமைச் செயலகத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை சேவையை துவக்கி வைத்தார். திருவள்ளுர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 733 முழு நேர நியாய விலைக் கடைகளும், 375 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1108 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் முதலமைச்சரால் திருவள்ளுர் மாவட்டத்தில் 118 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டத்தில் மாதம்தோறும் 563415 குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-

இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக திருவள்ளுர் மாவட்டம் சிறந்து விளங்க அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களும் எல்லா மக்களுக்கும் சேர்ந்திடும் வகையில், குறிப்பாக பெண்குழந்தை படிக்கும் திட்டத்தில் முதற் மாவட்டமாகும். 100-க்கு ஒரு நகரும் கடை உருவாக்குவது மிகப்பெரிய சாதனையாகும். அம்மா நகரும் நியாய விலைக்கடை மூலம் வீட்டிற்கே பொருட்கள் சென்று சேரக்கூடிய ஒரு சிறப்பான திட்டம். கொரோனா காலத்தில் சில இடங்களில் வீட்டிற்கே பொருட்கள் மற்றும் ரூ.1000 சென்று வழங்கப்பட்டது.

இனி 3.5 கிலோ மீட்டர் செல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று தங்கள் இடத்திற்கே பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்கிறது. முதற்கட்டமாக மாவட்டத்தில் 3500 கடைகள் 100-க்கு 10 கடைகள் அதிகப்படுத்தி நடமாடும் நியாய விலைக்கடை வாயிலாக வீடுகளுக்கு அருகில் நேரடியாக அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவே நாட்டுயர்வு என்ற முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அடிக்கடி கூறியது போல தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதன் முதலில் திருவள்ளுர் மாவட்டம், திரூர் ஊராட்சியில் தான் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக ஈடுகொடுக்கும் அளவிற்கு இன்று கூட்டுறவு வங்கிகள் செயல்படுகிறது. இதற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களே காரணம்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

பின்னர், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், பூனிமாங்காடு ஊராட்சி, கோதண்டராமபுரம் காலனியில், கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பாக, ஊரக தொழில் துறை அமைச்சர், தமிழ்ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் 10 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகளையும், 11 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் 7 இஸ்லாமிய மகளிர் தொழில் துவங்குதற்கு ரூ.80 ஆயிரத்திற்கான காசேலைகளையும் ஆக மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ. 1,81,589 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.