தற்போதைய செய்திகள்

234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாரா? ஸ்டாலினுக்கு, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால்

மதுரை

234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாரா என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால் விடுத்தள்ளார்.

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வீரம் உடையார் கண்மாயில் தூர்வாரும் பணியை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, ஏவஎஸ் பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுகவினர் மாநகராட்சி பகுதியில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள், திமுக நடத்தி வரும் கிராம சபை கூட்டத்தை கண்டு நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும், கிராம சபைக் கூட்டத்திற்கு 200 முதல் 300 ரூபாய் பணம் கொடுத்து பொதுமக்களை அழைத்து வருகிறார்கள். திமுக ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் ரவுடி தொல்லை அதிகமாக இருந்தது. கழகம் நடத்தும் கூட்டத்திற்கு வார்டு மெம்பர்கள் மூலம் அவர்களை அழைத்து வருவார்கள். தேர்தல் என்பதால் தற்போது கிராம சபை கூட்டம் போடுகிறார்கள்.

காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி குறை கூறி வருகிறார்கள், திமுகவினர் பத்தாண்டுகளில் மக்களை சந்தித்தார்களா,தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்ப்பது மக்கள் பணி இல்லை, எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டத்தை கேலி கிண்டல் பேசியவர்கள் தான் திமுகவினர்.

மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும். இதுதான் திமுகவின் கொள்கை. மத்திய அரசிற்கு நாங்கள் இணக்கமாக இருக்கிறோம். திமுக போல் பயந்துகொண்டு இல்லை. தோழமை கட்சிகளுக்காக உயிரையே கொடுப்போம். திமுகவை போல் இல்லை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்.

தி.மு.க.வுக்கு செல்வாக்கு உள்ளது என்றால் ஸடாலினுக்கு நான் நேரடியாக சவால் விடுகிறேன். உதயசூரியன் சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?, இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது. இழந்த சின்னத்தை மீண்டும் பெற்ற ஒரே கட்சி அதிமுக. இரட்டைஇலை மக்களின் இதயக்கனி. 2021ல் அதிகமான இடங்களில் கழகம் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.