தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது – அமைச்சர் பா.பென்ஜமின் உறுதி

காஞ்சிபுரம்

2021 சட்டமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போகும் என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது என்றும் அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் கலந்து கொண்டு பேசினார், நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பாசறை இணை செயலாளர் ஆர்.எஸ்.முத்துசாமி, பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை எஸ்.சிவக்குமார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

இதில் கழக பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமை கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, நீர் நிலைகளை பாதுகாக்க குடிமராமத்துத் திட்டம் கொண்டு வந்ததன் மூலம் இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் முதலமைச்சரை பாராட்டுகிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் நானும் விவசாயிகளின் நண்பன் என்று பச்சோந்தி வேடம் போடுகிறார்.

2007-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வருகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசில் தி.மு.க. அங்கம் வகித்துக் கொண்டிருந்தது. அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கருணாநிதியிடம் “காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை அரசு ஜெகட்டில் வெளியிட்டால்தான் அது நடைமுறைக்கு சாத்தியமாகும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் கருணாநிதி செவிசாய்க்கவில்லை. பின்பு அம்மா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றவுடன் உச்சநீதிமன்றம் சென்று காவேரி இறுதி தீர்ப்பினை பெற்றுத்தந்து அரசு ஜெகட்டில் வெளியிட்டார். இதிலிருந்தே விவசாயிகளுக்காக போராடியது யார் என்று தெரியும்.

அடகு வைத்த நகைகளை மீட்டு தருவோம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியதைபோல் இனிமேல் ஒருகாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. காஞ்சிபுரத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் தி.மு.க.விற்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு நீட் தேர்வை கொண்டு வரவேண்டும் என்ற முடிவினை எடுத்தது மத்தியில் அப்போது ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசாங்கம்.

அப்போது மத்திய அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்துவிட்டு இன்று ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்க்கிறார்? இது எந்த விதத்தில் நியாயம்? ஸ்டாலின் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்? ஆனால் கழக அரசு இதற்கு தீர்வு காண நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் 11 மருத்துவக் கல்லூரிகளையும் கொண்டுவந்ததையும் அனைவரும் அறிவார்கள்.

2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெறும். காஞ்சிபுரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது. தி.மு.க. காணாமல் போகும். அத்தகைய வெற்றிக்கு இந்த எழுச்சிமிகு பாசறை கூட்டம் உறுதுணையாக விளங்கும் என்பது உறுதி.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

கூட்ட முடிவில் காஞ்சிபுரம் நகரக் கழகச் செயலாளர் என்.பி.ஸ்டாலின் நன்றியுரையாற்றினார்.