தற்போதைய செய்திகள்

கரூர் அமராவதி பாலம் முதல் வெங்கக்கல்பட்டி பாலம் இடையே ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் எல்.இ.டி விளக்குகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இயக்கி வைத்தார்

கரூர்

கரூர் மாவட்டம் திண்டுக்கல் சாலையில் விபத்துகளை குறைக்கும் வகையில் கரூர் அமராவதி பாலம் முதல் – வெங்கக்கல்பட்டி மேம்பாலம் வரை உள்ள சாலையின் மைய பகுதியில் ரூ.3.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 310 எல்.இ.டி விளக்குகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இயக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

கரூர் – திண்டுக்கல் சாலையில் முக்கிய அலுவலகங்களான மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு விருந்தினர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்த சாலையில் விபத்துகளை குறைக்கும் வகையில் ஏற்கனவே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கரூர் அமராவதி பாலம் முதல் – வெங்கக்கல்பட்டி மேம்பாலம் வரை 5.3 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலையின் மைய பகுதியில் 2018-19-ம் நிதியாண்டின் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.3.30 கோடி மதிப்பில் 310 எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் தென்னிலை மேற்கு பகுதிக்குட்பட்ட கூனம்பட்டி பிரிவு, பவித்திரம் மேடு, புத்தாம்பூர் பகுதிக்குட்பட்ட ஜவுளிப்பூங்கா பகுதியில் இரண்டு இடங்களிலும், புங்கம்பாடி மேற்கு ஊராட்சிக்குட்பட்ட தடாகோவில் ஆகிய 5 பகுதிகளில் ரூ.35.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டுள்ளது.

கோவிந்தபாளையம், ரோட்டுகடை, ரெட்டிபாளையம் பிரிவு, ஆண்டாங்கோவில் புதூர் பிரிவு மற்றும் வடிவேல்நகர் மில்கேட் பேருந்து நிறுத்தம் ஆகிய 5 பகுதிகளில் ரூ.29.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்மின்கோபுர விளக்குகளும், 2018 ஆண்டு கருப்பம்பாளையம், பெரியார்வளைவு (சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு), வெண்ணைமலை (ராம்நகர் பிரிவு), மண்மங்கலம் மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் ரூ.49.98 லட்சம் மதிப்பிலான 10 உயர்மின்கோபுர மின்விளக்குகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் சந்திக்கும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் சாலையை கடக்கும் இடங்கள், குறுக்குச்சாலைகள் செல்லும் இடங்கள் என அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் போக்குவரத்துத்துறையின் சாலைபாதுகாப்பு நிதியின் மூலம் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்படுவதால், விபத்துக்கள் முற்றிலும் தடுக்கப்படுகின்றது. பொதுமக்களும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகள் ஏற்படாத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, கரூர் நகராட்சி ஆணையர் சுதா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ் (கரூர்), கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் கமலக்கண்ணன், மல்லிகாசுப்புராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.