தற்போதைய செய்திகள்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்- அக்-1 முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ( அக்-1) துவக்கிவைக்கிறார் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில்  உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் நாளை துவங்கி வைக்கிறார். இந்திய நாட்டில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது. இது பொதுவிநியோக திட்டத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். இதனை நடைமுறைப்படுத்த சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டதோடு, கடை ஒன்றிற்கு 5 சதவீத பொருட்கள் கூடுதாக விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரிசோதனை முறையில் மேற்கொண்டதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். அதே நிலை தமிழ்நாடு முழுவதும் தொடரும்.

தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். நமது மாநிலத்தில் உள்ளவர்கள் வெளி மாநிலத்திற்கு போகும்போது அங்கு இந்த திட்டத்தின்படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களை வாங்கிகொள்ளலாம்.அதுபோல வெளி மாநிலத்திலிருந்து நமது மாநிலத்திற்கு வருபவர்களும், இங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்முடைய சிறப்பு திட்டங்களை அவர்கள் பெற முடியாது. அவர்கள் பயோமெட்ரிக் முறையை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.