தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 58 புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், வண்ணக்கல் பதித்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்தல் என ரூ.7.17 கோடி மதிப்பீட்டில் 58 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது:- 

முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், பொருளாதார சூழ்நிலைகளால் பொதுமக்கள் பாதிப்படையாமல் காத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் கொரோனா வைரஸ் ஊரடங்கு தடை காலத்தினால் தடைபடாமல் தங்கு தடையின்றி பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மா.மூ.கோவிலூர் ஊராட்சியில் ரூ.211.68 லட்சம் மதிப்பீட்டில் 14 திட்டப்பணிகளும், பெரியகோட்டை ஊராட்சியில் ரூ.141.29 லட்சம் மதிப்பீட்டில் 8 திட்டப்பணிகளும், கோமையன்பட்டி ஊராட்சியில் ரூ.86.46 லட்சம் மதிப்பீட்டில் 5 திட்டப்பணிகளும், கஸ்தூரி நாயக்கன்பட்டி ஊராட்சியில் 69.42 லட்சம் மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகளும், பில்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.55.37 லட்சம் மதிப்பீட்டில் 5 திட்டப்பணிகளும், வன்னியபட்டி ஊராட்சியில் ரூ.49.69 லட்சம் மதிப்பீட்டில் 4 திட்டப்பணிகளும், வன்னியப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் 4 திட்டப்பணிகளும், நடுப்பட்டி ஊராட்சியில் ரூ.27.81 லட்சம் மதிப்பீட்டில் 4 திட்டப்பணிகளும்,

கோவுகவுண்டன்பட்டி ஊராட்சியில் ரூ.20.36 லட்சம் மதிப்பீட்டில் 4 திட்டப்பணிகளும், குரும்பட்டி ஊராட்சியில் ரூ.11.09 லட்சம் மதிப்பீட்டில் 2 திட்டப்பணிகளும், பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.10.04 லட்சம் மதிப்பீட்டில் 2 திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.7,17,41,000 மதிப்பீட்டில் 58 வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் அவரவர் வீடுகளுக்கே கிடைக்கும் வகையில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசால் பொதுமக்களின் நலன் கருதியும், பொதுமக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கே.கவிதா, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், திண்டுக்கல் ராஜசேகர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.