தற்போதைய செய்திகள்

நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றுவதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் – அமைச்சர் பா.பென்ஜமின் ஆவேசம்

திருவள்ளூர்

நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றுவதில் தி.மு.க.வினர் கை தேர்ந்தவர்கள் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பிவி.ரமணா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக தொழில் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான பா.பென்ஜமின், தகவல் தொழில் நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பிவி.ரமணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் மாற்றுவதில் கை தேர்ந்தவர்களாக திமுகவினர் இருக்கின்றனர். ஏதமிழக அரசு மீதும், முதல்வர் மீதும் திமுக மற்றும் எதிர்கட்சிகள் அவதூறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதனை முறியடிக்கும் வகையில் நம்முடைய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு திமுகவினர் பரப்பும் தகவல் அனைத்தும் பொய்யான தகவல் என சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மீண்டும் தவறான தகவல்களை திமுகவினர் பரப்பாத வகையில் மிக சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

அரசின் பல்வேறு திட்டங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பொது மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு உங்களுக்கு ரூபாய் 1000. இந்த வருடம் பொங்கல் பரிசு ரூ.2500. இப்படி பல்வேறு திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தி வருகின்றார் நம்முடைய முதல்வர். நம்முடைய கழக அரசு செய்கின்ற அனைத்து சாதனைகளையும், திட்டங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.