தற்போதைய செய்திகள்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கவச உடையுடன் அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவச உடையுடன் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு முதலமைச்சர் தலைமையில் கொரோனா தொற்றுக் காலத்திலும் தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று முழுகவச உடையணிந்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

இம்மருத்துவமனை 20 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட கோவிட் பராமரிப்பு மையம் தற்போது 2000 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள May I Help You பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகப் பிரிவு, ஆர்.டி.சி.பி.சி.ஆர். பரிசோதனை பிரிவு, ஊடுகதிர் பிரிவு, சி.டி.ஸ்கேன் பிரிவு மற்றும் ஆக்ஸிசசுன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் உணவின் தரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் நல்ல தரமான உணவு, சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்து அரசுக்கு தங்களது நன்றியை கூறினர்.

பின்னர் அங்கு முழு கவச உடையுடன் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை சந்தித்து உரையாடி அவர்களை அமைச்சர் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினார். அமைச்சர் உரையாடியது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளது என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், கவச உடை அணிவது எவ்வளவு கடினமான ஒரு விஷயம் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்துள்ளதாக பலமுறை கூறியதாகவும், இன்று கவச உடையணிந்து ஆய்வு செய்யும் பொழுது தான் அதன் கஷ்டம் என்னவென்று நேரில் அனுபவித்ததாகவும் தெரிவித்தார். மேலும் இந்த நோய் தொற்று காலத்தில் கவச உடையணிந்து பணியாற்றும் மருத்துவக் குழுவினருக்கு தலைவணங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.