சிறப்பு செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திருவுருவப்படத்திற்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சென்னை, அடையாரில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று காலை 10.00 மணியளவில் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினமான அக்டோபர் 1-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, அடையாரில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி ஆகியோர் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் நடிகர் ராம்குமார், விக்ரம் பிரபு, ஆர்.ஜி.துஷ்யந்த் ஆகியோரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அன்னாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியை துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) கே.சண்முகசுந்தரம், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.