தற்போதைய செய்திகள்

கடலூரில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த அடர்வன காடுகள் – அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தனர்

கடலூர்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த அடர்வனம் காடுகள் அமைக்கும் திட்டத்தை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தனர்.

பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த அடர் வனக்காடுகள் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழா கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு அடர்வனம் காடுகள் அமைக்கும் திட்டப்பணியை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:-

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழகத்தை பசுமையான மாநிலமாக மாற்றுவதற்கு பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள 16 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1200 மரக்கன்றுகள் நட்டு விழா தொடங்கி உள்ளது.

100க்கும் மேற்பட்ட வகைகளில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. பலவித பறவைகள் தஞ்சமடையும் வகையில் பலவகையான மரங்கள் நடப்பட்டு அடர்வனம் காடுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரங்கள் நடுவதால் இப்பகுதியில் சுற்றுச்சூழலும் மேம்படும். பல வகையான உயிரினங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ வகை செய்யும்.

அதுமட்டுமின்றி இப்பகுதி மாசு இல்லாத சுற்றுப்புறசூழல் மேம்பட்ட பகுதியாக மாறும். 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு கடலூர் மாவட்ட வேளாண்மை துறை தோட்டக்கலை துறை பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் மூலம் பராமரிக்கப்பட்டு அடர்வனம் காடு உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் அனைத்து விதமான பறவைகளும் வந்து தங்க ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

விழாவில் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பா.அருண் சத்யா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் க.திருமாறன், கடலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தெய்வ.பக்கிரி, கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இராம.பழனிசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜி.ஜே.குமார், விவசாய பிரிவு செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஏ.கே.சுப்பிரமணியன், பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், கடலூர் நகர அவைத்தலைவர் ராமச்சந்திரன், நகர துணை செயலாளர் வ.கந்தன், பொருளாளர் தனசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் காடாம்புலியூர் தேவநாதன், செல்வ அழகானந்தம், இராமபுரம் தேவநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கல்யாணி ரமேஷ், தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.