தற்போதைய செய்திகள்

நூலக காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் 7 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, வெள்ளாங்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசுபள்ளிகளில் இதுவரை 15.72 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டம் கீழ் மாணவர் சேர்க்கைக்கான காலம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தான் கால நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கை குறித்த ஆய்வுக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த நற்சான்றிதழ் பெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவர்களை நல்வழிபடுத்தவும் தேசபக்தியை ஏற்படுத்தவும் சாரணர் இயக்கத்திற்காக பள்ளி கல்வித்துறை மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நூலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், ஒன்றியக்குழு தலைவர் மெளதீஸ்வரன், வழக்கறிஞர் வி.ஆர்.வேலுமணி, வெள்ளாளபாளையம் தலைவர் சத்தியபாமா வேலுமணி, ஒன்றிய கவுன்சிலர் திலகவதி வாசுதேவன், ஊராட்சி தலைவர் ஆப்பிள் தன்னாசி, ஞானசுந்தரம், கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.