தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியையும்- தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? விடியா அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

சென்னை

நிதி மேலாண்மையை மோசமாக்கி சீரழித்தது யார் என்று கழக ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று விடியா அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திரு.வி.க.நகரில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

1989-91-ல் கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி. ஆனால் அம்மா முதலமைச்சராக வந்த பிறகு தான் கஜானாவை நிரப்பினார். களஞ்சியத்தையும் நிரப்பினார். 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது. மீண்டும் அந்த 5 ஆண்டுகளில் கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி. திரும்பவும் 2001-ல் அம்மா முதலமைச்சராக வருகிறார். கஜானாவை நிரப்பினார்.

களஞ்சியத்தையும் நிரப்பினார். திரும்பவும் 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி. தி.மு.க. அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற காலம், நாங்கள் (கழக) ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அப்போது தெரிந்து விடும் இவர்களின் வெட்ட வெளிச்சம்.

எந்த அளவிற்கு நிதி மேலாண்மையை மோசமாக்கி, நிதி நிர்வாகத்தை சீரழித்து, மக்களை வஞ்சித்து, எப்படி எல்லாம் ஏமாற்று வித்தையை செய்தார்கள், களஞ்சியத்தை காலி செய்தார்கள், கருவூலத்தையும் காலி செய்தார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். இதனை செய்ய இந்த அரசு தயாரா? செய்யாது. பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் குற்றச்சாட்டு சொல்வார்கள். அம்மாவின் ஆட்சிக் காலத்தில் 7-வது நிதிக்குழுவில் ரூ.14 ஆயிரம் கோடியை தந்தோம்.

அரசுக்கு நிதி நெருக்கடி இருந்த சூழ்நிலையிலும் ரூ.14 ஆயிரம் கோடியை அளித்தோம். இன்றைக்கும் நிதி பொதுவுடைமை சட்டப்படி 3 சதவீதத்திற்கும் குறைவாகத் தானே வைத்து விட்டு வந்துள்ளோம். இதற்கு மேல் அதிகரிக்கவில்லையே. தி.மு.க. அரசுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயர்
உண்டு. அப்போது மைனாரிட்டி அரசு என்று சொன்னோம். தற்போது விடியா அரசு என்று சொல்கிறோம்.

மைனாரிட்டி அரசு போய் தற்போது விடியா அரசு வந்துள்ளது. இந்த விடியா அரசு நிதி மேலாண்மையை பெருக்கி இருக்க வேண்டும். சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை இந்த விடியா அரசுக்கு. நிதி மேலாண்மையை பெருக்காமல் வாய் சவடால் மட்டும் இருந்தால் போதுமா? எது கேட்டாலும் நாங்கள் தான். எல்லாவற்றுக்கும் நாங்கள் தான். தி.மு.க.வினர் வீட்டில் சாப்பாடு சமைக்கவில்லை என்றாலும்கூட அதற்கு நாங்கள் பொறுப்பில்லை,
கழகம் தான் காரணம் என்று சொல்வார்கள் .சாப்பாடு வேகவில்லை என்றாலும் நாங்கள் தான் காரணம் என்று சொல்வார்கள். நம்மை நம்பி வாக்களித்துள்ளார்கள்.

வாக்குறுதிகளை நாம் அளித்தோம். அந்த வாக்குறுதிகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற வேண்டும். அம்மாவின் ஆட்சிக் காலத்தில் நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தாலிக்கு தங்கம், 16 வகையாக பொருட்கள், முதியோர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினோம். அனைத்தும் சமூக நலத்திட்டங்கள். சமூக நீதியை நிலைநாட்ட ரூ.70 ஆயிரம் கோடியை செலவு செய்தோம். ரூ.70 ஆயிரம் கோடியை செலவு செய்தாலும் அரசு ஊழியர்களுக்கு ஏதாவது குறை வைத்தோமா?

கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் கொடுத்த அரசு அம்மாவின் அரசு. இரண்டு வருடம் சம்பளத்தை குறைக்கவில்லை. வேலைக்கு போகவில்லை என்றாலும் வீடு தேடி சம்பளம் வரும். தற்போது அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. கூட இதுவரை வழங்கவில்லை இந்த விடியா அரசு.

என்ன நிர்வாகம் செய்கிறார்கள் இவர்கள்? பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஏதாவது செய்கிறார்களா? எப்போது பார்த்தாலும் ஒரே ஒருவரின் முகம் மட்டும் தெரிகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முகம் மட்டும்தான் தெரிகிறது. வேறு யார் முகமும் தெரியாது.

ஒன் மேன் ஷோ நடக்கிறது. பொருளாதார நிபுணர்களை நியமித்து 8 மாதம் ஆகிவிட்டது. அவர்களுக்கு எவ்வளவு செலவு ஆனது? அவர்கள் தமிழ்நாட்டுக்கு உருப்படியான யோசனையை அளித்தார்களா? தமிழ்நாட்டில் இப்போது தேனும், பாலும் ஓடுகிறதா? வாக்களித்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை. பொங்கலுக்கு நாங்கள் ரூ.2.500 தந்தோம். இவர்கள் (தி.மு.க. அரசு) ரூ.5 ஆயிரம் தரவில்லை.முதியோர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1.500 தருவேன் என்று சொன்னீர்கள்.அதுவும் தரவில்லை. கேஸ் மானியம் தரவில்லை. பெட்ரோல் விலையையும் குறைக்கவில்லை.

இன்றைக்கு மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் வெறும் விளம்பரம் மட்டுமே நடக்கிறது. படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் விளம்பரத்தால் உயர்ந்தவர் வாழ்க்கை நிலை பெறாது என்ற பாடல் வரும். அதுபோலத்தான் இவர்களின் நடவடிக்கையும் உள்ளது.

கேள்வி:- தமிழக ஆளுநர் முதலமைச்சரை பாராட்டியுள்ளாரே?

பதில்:- உங்கள் திருமணத்திற்கு நான் வருகிறேன் என்றால் நான் என்ன சொல்வேன். நல்ல பத்திரிகையாளர்.புத்திசாலி என்றுதான் நான் சொல்வேன். எனவே ஒரு நிகழ்ச்சியில் வைத்து பேசுவதால் ஒரு பெரிய சான்றிதழை ஐ.நா. சபை தந்ததாக நினைக்க வேண்டாம். அகில இந்திய அளவில் ஒரு ரேட்டிங் போட்டு இவர் திறமையான முதலமைச்சர் என்று ஏதாவது அளித்துள்ளார்களா, இல்லையே? ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

கேள்வி:- தமிழக அரசிடம் நிதி இல்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார்களே?

பதில்:- நிதி இல்லை. நிதி இல்லை என்று பஞ்சப் பாட்டை பாடிவிட்டு 5 வருடத்தை ஓட்டி விடுவார்கள். தமிழ்நாட்டில் தற்போது இலவசமாக மொட்டை தான் கிடைக்கிறது. உங்களுக்கு (தி.மு.க.வுக்கு) தமிழ்நாட்டு மக்கள் மொட்டை அடிப்பார்கள்.

கேள்வி:- முன்னாள் பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடைபெற்றது குறித்து?
பதில்:- ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதை தான் இது. பொறுக்க முடியவில்லை. ஆரோக்கியமான விமர்சனம் இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம். இதுதான் இந்த ஆட்சியின் நிலை.

இன்றைக்கு ஒரு பக்கம் கழகத்தினர் மீது பொய் வழக்கு. அதுபோல யார் இந்த அரசை எதிர்த்தாலும் பொய் வழக்கு. ஒரு பக்கம் கூட்டம் நடக்கும் இடங்களில் குண்டர்களை வைத்து தகராறு செய்வது என்று இறங்கியுள்ளார்கள்.
அமைதியை நிலை நாட்ட வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்ப்பது தான் மனம் வருத்தப்படக்கூடிய செயலாக உள்ளது. காவல்துறையினர் முன்பு இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்கிறது என்றால் எப்படி?

பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்ற உறுப்பினர். அவரால் தன்னுடைய கடமையை செய்ய முடியவில்லை. எடப்பாடியார் காலத்தில் குளங்கள் வெட்டப்பட்டது. குளங்கள் வெட்டப்பட்டதால் அதற்கு மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஊர் மக்கள் பொள்ளாச்சி ஜெயராமனை அழைக்கிறார்கள். அதனால் செல்கிறார். இதனை ஜீரணிக்க முடியாத தி.மு.க. குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டம்- ஒழுங்கு பாதிக்கக்கூடாது என்ற வகையில் அமைதியாக இருக்கிறோம். கழகத்தை சீண்டினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

சீமான் கூட்டத்தில் தி.மு.க.வினர் மேடை ஏறி அடிக்கிறார்கள். தி.மு.க.வை எதிர்த்து யாரும் பேசக்கூடாதா? இது என்ன மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சி இது. மக்கள் ஆட்சியில் பேசினால் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, காவல்துறையை ஏவி விட்டு ஒருதலை பட்சமாக நடப்பது என்பது தமிழ்நாடு இதுவரை கண்டிராத சரித்திரம். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு கழகம் இருக்காது. ஒரு கழக தொண்டன் மீது கை வைத்தால் அதன் பின்விளைவுகளை கடுமையாக சந்திக்க வேண்டி வரும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.