திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஆவின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க பல இடங்களில் குளிரூட்டும் நிலையம் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தகவல்

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க பல இடங்களில் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிர்வாக குழு இயக்குநர்களின் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆவின் வளாகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆவின் பொது மேலாளர் இளங்கோவன், துணைத்தலைவர் பாரிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொது மேலாளர் நாச்சியப்பன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நிர்வாக இயக்குநர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கி பேசியதாவது:- 

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்பை விட தற்போது அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த மாதம் வந்த முதலமைச்சர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சென்றார்.

அதில் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்ட ஆவினுக்காக ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் ஆவினில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அதிக இடங்களில் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.