தற்போதைய செய்திகள்

அரசின் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுவதா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்

மதுரை

அரசின் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுவதா? என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்்தநாளை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தீபாவளி சிறப்பு விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், கே. மாணிக்கம், கழக அம்மா பேரவை இணை செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மகாத்மா காந்தி 20 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். இதில் 5 முறை மதுரைக்கு மட்டும் வந்துள்ளார். 22.9.1921 அன்று மதுரையில் மக்களின் ஏழ்மை நிலையை கண்டறிந்த மகாத்மா காந்தி தனது முழு ஆடையை துறந்து அரை ஆடையை மேற்கொண்டார். 2119 நாட்கள் நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரால் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி உயிர் பிரியும் போது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடை, சால்வை, மூக்கு கண்ணாடி, கதர் துணி, கைக்குட்டை உள்ளிட்ட 14 பொருட்கள் மதுரை காந்தி மியூசியத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சிறப்பை மதுரை பெற்றுள்ளது.

2014-ம் ஆண்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தை ரூ.12 கோடி மதிப்பில் அம்மா புதுப்பித்து தந்தார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் தமிழகம் முதலிடம் பெற்றதோடு 13 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. கதர் ஆடையை ஊக்குவிக்கும் வகையில் அம்மாவின் அரசு அனைத்து கதர் ஆடைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் நெசவாளர்களை காத்திடும் வண்ணம் நல வாரியத்தில் உள்ள 1,03,343 நெசவாளர்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகையை முதலமைச்சர் வழங்கி உள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தி தனிமனித ஒழுக்கத்துடன். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார். சொல்லுவதை விட செயல் வடிவத்தில் காட்டினார்.

கிராமசபை கூட்டம் நடத்த முன் எச்சரிக்கையுடன் கள நிலவரங்களை ஆராய்ந்த போது தற்போது உள்ள சூழலில் மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதனால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் நலன் சார்ந்த முடிவாகும். எதிர்க்கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசி வருவது நியாயம் அல்ல.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக உரிமை காக்கப்படும் என்று கனிமொழி கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சியில் தான் உரிமைகள் எல்லாம் பறிபோயின என்று மக்களுக்கு தெரியும். அதை கழக அரசு மீட்டுத் தந்தது. காவேரி நதி நீர் பிரச்சினையில் இழந்த உரிமையை மீட்டுத் தந்தது அம்மாவின் அரசு ஆகும். எதிர்க்கட்சிகள் தமிழகத்தின் உரிமையை மீட்க எந்த பங்களிப்பும் அளிக்கவில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

தற்போது களத்தில் நிற்கும் கட்சி அதிமுக. அதை எதிர்த்து நிற்கும் கட்சி திமுக.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். அதை ஐ.நா. சபை பாராட்டியது. அம்மாவின் திட்டமான தொட்டில் குழந்தை திட்டத்தை உலக நாடே பாராட்டியது. அம்மாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பாரதப்பிரதமர் நாடாளுமன்றத்தில் பாராட்டியதோடு இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டுத் தந்தார். அதேபோல் வர்தா புயலில் சிறப்பாக பணியாற்றினார்.தற்போது முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமி கொரோனா காலத்திலும் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக சிறப்பாக பணியாற்றினார். இதனை பாரதப் பிரதமர் காணொலி காட்சி மூலம் நமது முதலமைச்சரை பாராட்டினார்.

இந்த இயக்கத்தில் தான் வலிமையுள்ள தலைவர்கள், வரலாற்று திட்டங்கள் உள்ளன. ஆனால் தி.மு.க.வில் எதுவும் சொல்வதற்கு இல்லை. காலி பானையாக உள்ளது. அம்மாவின் அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் என அனைத்தும் நிரம்பி உள்ளன. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ராமர் லட்சுமணன் போல் செயல்பட்டு ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை போல் ஒற்றுமையுடன் உள்ளனர்.மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்ப்பினை வரும் 7-ந் தேதி ஒருமித்த கருத்தோடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அறிவிப்பார்கள். 7-ந் தேதி தலைமை அறிவிக்கும் கருத்துக்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.