கன்னியாகுமரி

கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு ரூ.28 லட்சத்தில் புதிய வீடுகள் – என்.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு ரூ.28 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டும் பணியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட, ஆரோக்கியபுரத்தில், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், ரூ.28 லட்சம் மதிப்பில், 14 வீடுகள் கட்டப்படவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், பங்குத்தந்தை அருட்பணி.மதன் தலைமையில், லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட, ஆரோக்கியபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவர்களுக்கான புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்ததாவது:-

தமிழகம் முழுவதும் மீனவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இத்திட்டமானது, மீனவர்களுக்காகவே தொடங்கப்பட்டதாகும்.

கன்னியாகுமரி மாவட்டம், சுனாமி மற்றும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டபோது, மீனவ மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு செய்தது. தொடர்ந்து மீனவ மக்களின் நலன் காப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மீனவர்கள் தங்களது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். மீனவர்கள் கடுமையாக பணியாற்றி, தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு, தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகிறார்கள். குறிப்பாக, மீனவ சமுதாய மக்கள் கடலில் மீன்பிடிக்க செல்வதாலும், கடுமையாக உழைப்பதாலும், தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ஏற்படுகிறது. எனவே, கொரோனா போன்ற நோய்களின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது.

இதில், தமிழக அரசின் பங்காக ஒரு வீடு ரூ.1.70 லட்சம் செலவில் கட்டப்படவுள்ளது கூடுதலாக கழிப்பறை கட்டுவதற்கு ரூ.18 ஆயிரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும். இதுபோன்ற திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழகத்திலுள்ள மீனவர்களுக்கு தான் செயல்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

மீனவர்களின் நண்பனாக விளங்கிய, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் செயல்பட்ட, புரட்சித்தலைவி அம்மாவும், முதலமைச்சரும், மீனவர்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். வரும் காலங்களிலும், மீனவ மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப் பெருந்தலைவர் எம்.சேவியர் மனோகரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஈ.நீலப்பெருமாள், லீபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயகுமாரி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன் (எ) சந்துரு, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ராஜேஷ், அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நீலபாலகிருஷ்ணன், டி.டி.சதாசிவம், லிவிங்ஸ்டன், லீன், சுகுமாரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.