அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.64 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் – அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்

அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில் மருத்துவ பணியாளர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு, ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இசிஜி, அல்ட்ரா சோனோகிராம், செல் கவுன்டர், பெடல் டாப்லர் உள்ளிட்ட இருபது மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்காக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை நிதியிலிருந்து ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படும் இக்கருவிகள் மூலம் மாரடைப்பு போன்ற இருதய நோய்களை இசிஜி மூலம் முன்னரே கண்டறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உயிரை காக்கவும், அல்ட்ரா சோனோகிராம் கருவி மூலம் கர்ப்பிணி தாய்மார்களின் குழந்தையின் வளர்ச்சி, நீர் சத்து மற்றும் கர்ப்ப பையில் உள்ள சிக்கல்களை கண்டறியவும் உதவுகிறது.
மேலும், செல் கவுன்டர் மூலம் ரத்த சோகை கண்டறிதல், உடலில் கிருமி நோய் தொற்றை கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கவும், பெடல் டோப்லர் மூலம் கர்ப்ப காலத்தில் சிசு இருதய துடிப்பு கண்காணிப்பதன் மூலம் சிசு இறப்பதை தவிர்க்கலாம். ஆகவே, ஏழை, எளிய மக்களும் உயரிய மருத்துவ சேவை பெறும் நோக்கில் முதலமைச்சரால் மருத்துவ சேவைக்கான அடிப்படை கட்டமைப்புகள் கிராம அளவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 448 நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு சீல்ட் முககவசம் வழங்கும் பொருட்டு, 10 நபர்களுக்கு சீல்ட் முககவசங்களையும் மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் அரசு தலைமை கொறடா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஒன்றியக்குழுத்தலைவர் பு.செந்தமிழ்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.