தற்போதைய செய்திகள்

இலவச மருத்துவ முகாமில் அமைச்சருக்கு பரிசோதனை

தென்காசி

சங்கரன்கோவிலில் நடந்த இலவச மருத்துவ முகாமில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பரிசோதனை செய்து கொண்டார்.

பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அனைத்து நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதனை தொடர்ந்து தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளிலும், மேலகரம், இலஞ்சி, சுரண்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், திருவேங்கடம், அச்சன்புதூர், சிவகிரி, வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிகளிலும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், கடைத்தெரு போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் 151 இடங்களில் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற நோய்கள் கண்டறிவதற்கான முகாம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் நகராட்சியில் நேற்று நடைபெற்ற இலவச நீரிழிவு நோய் கண்டறிதல் முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, பாவூர்சத்திரத்தில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முகைதீன் அப்துல் காதர், கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்தி, கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் கண்ணன் (எ) ராஜீ, முக்கிய பிரமுகர்கள் சுப்பையா பாண்டியன், ஆவின் ரமேஷ், ஆறுமுகம், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்த சாரதி, திலகராஜ் உட்பட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.