தற்போதைய செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய், சேய் இறப்பு விகிதம் குறைவு – அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

திருப்பத்தூர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்- சேய் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி புத்தகரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து வளர்இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கிட விழிப்புணர்வு கையேடு, இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை வழங்கினார்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஆரோக்கிய பெட்டகம், மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்கு அடுத்த ஒரு வருடம் ஊட்டசத்து உணவுகளை வழங்கிட 2 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஊட்டசத்து பொருட்களை வழங்கிய அமைச்சர் ஊட்டசத்து உணவு முறைகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன் அருள் தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

அம்மா அவர்களின் நல்லாட்சியில் தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அளவில் தமிழகத்தில் தான் தாய், சேய் உயிரிழப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் தமிழக அரசு குழந்தை வளர்ச்சி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதேயாகும். தாயும் சேயும் நலமுடன் இருக்க அம்மாவின் அரசு வளர் இளம்பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

திருமணத்திற்கு பிறகு தாய் கருவுற்றதில் இருந்து குழந்தை வளர்ப்புக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் நிதியுதவிகள் அனைத்தும் வழங்கி ஏழை எளிய தாயையும், சேயையும் காத்து வருகிறது.

தேசிய ஊட்டசத்து மாத விழாவின் போது வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடையில்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகளை அளித்து அவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துதல் போன்றவை நடைபெறும். ஆகவே கிராமம், நகரங்களில் உள்ள தாய்மார்கள் வளர்இளம்பெண்கள் தங்கள் உடல் நிலையினையும் ஊட்டசத்து குறைபாட்டினையும் சரிபார்த்து குறைகள் இருந்தால் அங்கன்வாடி மற்றும் மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் சுரேஷ், உதவி இயக்குநர் அருண், குழந்தை வளர்ச்சி அலுவலர் சக்திசுபாஷினி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ் மற்றும் குழந்தை வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.