கன்னியாகுமரி

உலக நாடுகளே போற்றும் மகத்தான தலைவர் காந்தி – தமிழக அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் புகழாரம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர் காந்தி என்று அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பெருமிதத்துடன் கூறினார்.

அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜரின் 45-வது நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும், காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் 2-ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அபூர்வ சூரிய ஒளி அண்ணல் காந்தியடிகளின் பீடத்தில் 12 மணியளவில் விழும். இதனை காண உள்ளுர் மட்டுமல்லாது வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள். இவ்வாண்டும் அபூர்வ சூரிய ஒளி சரியாக 12 மணிக்கு அண்ணல் காந்தியடிகளின் பீடத்தில் விழுந்தது. இதனை நாங்களும், சுற்றுலாப்பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

அண்ணல் மகாத்மா காந்தி, இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது, உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்தியின் பெருமைகளையும், தியாகங்களையும், அன்னாரது அமைதி மார்க்கத்தையும், கொள்கைகளையும், அவரது வழிகாட்டுதலின்படி, நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, அன்னாருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் எம்.சேவியர் மனோகரன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முனைவர் ஈ.நீலப்பெருமாள், எஸ்.முத்துகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ, நாகர்கோவில் கோட்டாட்சியர் அ.மயில், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், அகஸ்தீஸ்வரம், தோவாளை வேளாண் விளைப்பொருள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஆர்.கிருஷ்ணதாஸ், மனோகரன், குமார், லீன் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.