தற்போதைய செய்திகள்

104 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் – அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்-கே.சி.கருப்பணன் வழங்கினர்

ஈரோடு

ஈரோட்டில் 996 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 104 உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்களையும், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்த கொண்டு 996 பயனாளிகளுக்கு ரூ.11.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளையும், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்கும் விதமாக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. மேலும் விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவையான நேரங்களில் உடனடியாக மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளின் வாயிலாக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பாரத பிரதமர் பாராட்டும் அளவிற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையானது 3-வது முறையாக நிரம்பியுள்ளது. பவானிசாகர் அணையில் 14.08.2020 அன்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை தண்ணீர் இருப்பு கொள்ளளவு குறையாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண்கள் சுயமாகவும், தன்னம்பிக்கையோடும் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திடும் வகையில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மகளிர் மேம்பாட்டிற்கு என மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மகளிர் நலனையும், மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடபுத்தகங்கள், நோட்டுகள், காலனிகள், மிதிவண்டி, மடிகணினி உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. பாடபுத்தகங்கள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு கூடுதலாகவே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தெரிவித்தனர்.

முன்னதாக, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஈரோடு மாநகராட்சி, பன்னீர்செல்வம் பூங்கா அருகில் மகளிர் சுயஉதவிக்குழுவின் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.