தற்போதைய செய்திகள்

இணையத்தின் முலம் நடத்தப்பட்ட வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பரிசு வழங்கினார்

சென்னை

இணையத்தின் முலம் நடத்தப்பட்ட வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்.

வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து நாடெங்கிலும் உள்ள பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவியம், கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகளையும், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் இணையத்தின் வாயிலாக நடத்தி போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக அனைவரும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளில் இருந்தபடியே போட்டிகளில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்து சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் எஸ்.யுவராஜ், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குநர் சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சையது முஜம்மில் அப்பாஸ், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (சமூக வனம் மற்றும் வன விரிவாக்கம்) கயாரத் மோகன்தாஸ், அரசு ரப்பர் கழகத்தின் தலைவர் அசோக் உபரேதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.