தற்போதைய செய்திகள்

கதர் ஆடைகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் – பொதுமக்களுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

கோவை

கதர் ஆடைகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்தி நெசவாளர்களை வாழ்வில் ஏற்றம்பெற செய்வோம் என்று பொதுமக்களுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில், அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழாவில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

இந்திய திருநாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும், தன் வாழ்கையையே அர்ப்பணித்த மகாத்மா காந்தியடிகளை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அண்ணல் காந்தியடிகள் நமது நாட்டிலுள்ள இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்தவும், சுயதொழில் செய்து நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கதர்கிராமத்தொழில் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் நமது மக்களுடைய தேவைகளை கிராம மக்களே உற்பத்தி செய்து கொண்டனர்.

அவ்வாறு தொடங்கப்பட்ட கதர் மற்றும் கிராமத்தொழில்கள் இன்று இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்து மிகவும் போற்றத்தக்க வகையில் பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெருமளவில் வழங்கும் வகையில் பருத்தி நூல் உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் கிடைக்கும் நூலினைக் கொண்டு பெருமளவு எண்ணிக்கைகளில் நெசவு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்திற்கு 2020-21ம் ஆண்டிற்கு ரூ.257.60 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ரூ.179.20 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே நடப்பு ஆண்டிற்கும் மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவினரால் கதர் விற்பனைக்காக மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமாகவும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமாகவும் சிறப்பு தள்ளுபடியை அரசு அளித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள நூற்போர், நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரீகத்திற்கு ஏற்றாவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினை கலைஞர்கள் மூலம் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.

கோவை மண்டலத்தில் அவினாசி சாலையில் உள்ள பிரதானக் கதரங்காடி, ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், உதகை ஆகிய நான்கு இடங்களில் காதிகிராப்ட் விற்பனை நிலையங்களும், கதர் உற்பத்தி அலகு சூலூர், வடசித்தூர், காலனி அலகு குப்பிச்சிபாளையம், அட்டைப்பெட்டி உற்பத்தி அலகு கோவனூர், காகித பை உற்பத்தி அலகு சிட்கோ, யூகலிப்டஸ் தைல அலகு உதகை ஆகிய 5 பகுதிகளில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர கோயம்புத்தூர் மவாட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு பதினைந்து தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைத்து கதர் விற்பனை செய்யப்பட உள்ளது.

அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், தொழிலாளர்களும் மற்றும் பொது மக்களும் கதர் துணி ரகங்களை பெருமளவில் வாங்கி காந்தியின் கனவுகளை நனவாக்கும் பொருட்டும், நாட்டின் நலன் கருதியும் நலிவடைந்த கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவை வழங்கிடவேண்டும்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரணத் தொகையாக ஒரு நபருக்கு ரூ.1000 வீதம் 68 நபர்களுக்கு இருமுறை ரூபாய் 1 லட்சத்து 36 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையாக 2019-2020ம் ஆண்டிற்கு தலா ரூ.5000 வீதம் 314 பயனாளிகளுக்கு ரூபாய் 15 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கதர் நூற்போர் நெசவாளர் நலவாரியம் மூலம், கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணியாற்றும் நூற்பாளர், நெசவாளர்களின் குடும்பத்திற்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து, இயற்கை மரணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகைகளும், முதியோர் ஓய்வூதியமும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.

‘கதர் பயன்படுத்துவதால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர் தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி கிடைக்கின்றது” என்ற காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் மக்கள் அதிகளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதை நெசவு செய்யும் ஏழை எளிய மக்களின் வாழ்வு ஏற்றம்பெற துணை புரிய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

எளிமை தேசப்பற்றை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் கதர் பிரதிபலிக்கின்றது, அத்தகைய சிறப்பு மிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கிராமப்புற ஏழை பெண்களின் மேம்பாட்டு நலனைக் கருதியும், சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையில், தள்ளுபடி சலுகையைப்பயன்படுத்தி கதர் ரகங்களை அதிகளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் உதவி இயக்குநர் (கதர் கிராமத்தொழில்கள்) கிரிஅய்யப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.