தற்போதைய செய்திகள்

சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற சான்றிதழ்கள் – அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

நாமக்கல்

பள்ளிபாளையத்தில் 2 இடத்தில் அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற சான்றிதழ்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் அரசின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு ஜீவா செட் மற்றும் நட்டாக்கவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள், நியாய விலைக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அதன்பின்னர் பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி நிறுத்தும் கூடத்தை அவர் திறந்து வைத்தார்.

அங்கு பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் மத்திய அரசின் ஸ்வா நிதி திட்டத்தின் கீழ், 150 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி பெறுவதற்கான சான்றுகளையும் அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார். அப்போது, தமிழ்நாடு அனைத்து சாலைகளைப் பயன்படுத்துவோருக்கான விபத்தைத் தடுப்போம் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

மேலும், தூய்மைப் பணியாளர் குடியிருப்புக்கு சாலை, மழைநீர் வடிகால், தார் சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளிபாளையத்தில் 61 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் பெறுவதற்கான ஆணைகளையும், 43 பேருக்கு அம்மா இரு சக்கர வாகனங்களையும் அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார். நலத்திட்ட உதவிகள் மற்றும் தொடங்கி வைத்த மொத்த பணிகளின் மொத்த மதிப்பு, ரூ.1.68 கோடி ஆகும்.

அப்போது அமைச்சர் பி.தங்கமணி தெரிவிக்கையில், இங்கு துவக்கி வைக்கப்படும் பணிகள் அனைத்தும் குறித்த காலத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.