தற்போதைய செய்திகள்

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதம்

காஞ்சிபுரம்

மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் பா.பென்ஜமின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் 13 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மற்றும் 26 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு 7 ஆயிரம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு 90 சதவீத தொகையை பங்களிக்கிறது. மீதமுள்ள 10 சதவீதத்தை பயனாளிகள் அளிக்க வேண்டும்.

இந்த திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உதாரணமாக சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் தொடர்புகொண்டு பிரதமர் பேசுகையில், தமிழகம் அனைத்து துறையிலும் சிறப்புடன் செயல்படுவதாக பாராட்டினார்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் சி.மணிமாறன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.