தற்போதைய செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

தூத்துக்குடி

தூய்மை பாரத திட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஸ்ரீவைகுண்டம் ஊராட்சிக்கு இந்திய அளவில் 3-வது இடம் பிடித்துள்ளது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தாறு ஒன்றியம் கல்லூரணி, கோவில்பட்டி ஒன்றியம் லாயல்மில்காலணி பழந்தோட்ட நகர் மற்றும் கொடுக்காம்பாறை ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் சேவை தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, அம்மா நகரும் நியாய விலைக்கடை சேவையை துவக்கி வைத்து குடிமை பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நியாய விலைக்கடை அதிகம் தூரம் உள்ள கிராமப்பகுதிகளுக்கு இத்திட்டத்தினை தொடங்கி உள்ளார்.கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார். பாரத பிரதமருடன் காணொலி காட்சி மூலம் நடந்த உரையாடலில் நமது முதலமைச்சரை பாரதம பிரதமர் அவர்களே பாராட்டினார். கொரோனா தடுப்பு பணியில் இந்தியாவிலே முன்னோடி மாநிலமாக இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழகம் இருப்பதை பாரத பிரதமர் அவர்களே பாராட்டியுள்ளார்.

மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அந்த அளவுக்கு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தான் இன்றைக்கு சுவிட்ச் பாரத திட்டம், தூய்மை பாரத திட்டத்திலே இந்தியாவிலே நம்பர் 1 மாவட்டம் என்று பெருமையை திருநெல்வேலி மாவட்டம் பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தினை நமது தூத்துக்குடி மாவட்டம் பெற்றுள்ளது. நமது மாநிலத்தை பொறுத்தவரை இந்தியாவிலே உள்ள அத்தனை மாவட்டங்களிலும் முதல் பரிசை திருநெல்வேலி மாவட்டமும், இரண்டாவது பரிசை தூத்துக்குடி மாவட்டமும் பெற்றுள்ளது.

அந்த வகையிலே நமக்கு பெருமைதான். அந்த வகையிலே ஊராட்சி ஒன்றிய அளவிலே பார்த்தால் இந்தியாவில் அத்தனை ஊராட்சிகளிலும், தமிழகத்தில் உள்ள 386 ஊராட்சிகளில் இந்தியா முழுமைக்கும் அத்தனை மாநிலங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் நமது மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி இந்தியா அளவிலே மூன்றாவது இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்வோடு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

படர்ந்தபுளி பிர்க்காவை சேர்ந்த விவசாயிகள் கணக்கெடுப்பில் நிகழ்ந்த தவறினால் 2016-2017ல் பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் நிலுவையில் இருந்தது. நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் எழுதியும், தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் நானும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் நேரடியாக சென்னைக்கு பாதிக்கப்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து சென்று உயர் அதிகாரிகளுடன் நேரடியாக பேசியதன் பயனாக 2016-2017ல் நிலுவையில் உள்ள 616 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சத்தி 43 ஆயிரத்தி 912 ரூபாயை இன்றைக்கு விவசாயிகளின் கணக்கிலே வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல படர்ந்தபுளி, சிங்கிளிபட்டி, கழுகாசலபுரம், பிள்ளையார்நத்தம் போன்ற நான்கு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 616 பயனாளிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.3 கோடியே 68 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் என்னை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.