கன்னியாகுமரி

நோய்தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தாரீர் – பொதுமக்களுக்கு என்.தளவாய்சுந்தரம் வேண்டுகோள்

கன்னியாகுமரி

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட, கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின், அம்மா நகரும் நியாயவிலைக்கடையினை, பெருமாள்புரத்தில் துவக்கி வைத்து, பேசியதாவது:-

நமது மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள், மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பகுதி வாரியாக மொத்தம் 770 நியாயவிலைக்கடைகள் உள்ளன. இந்த நியாவிலைக்கடைகள் மூலமாக மொத்தம் 5 லட்சத்து 37 ஆயிரத்து 500 பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது 55 நடமாடும் நியாவிலைக்கடைகள் துவங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மேலும், இரண்டு கடைகள் மேலும் கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம், அம்மா அவர்களிள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து செயல்பட்டு வரும், இந்த அரசு பொதுமக்களாகிய உங்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று இருந்தநிலையில், ஒரே நாளில் மட்டும் 10,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் வெளியில் செல்லும்போதும், வீட்டில் இருக்கும்போதும், எப்பொழுதும் முகக்கவசங்களை அணிந்து, அடிக்கடி கைகளை சோப்புக் கொண்டு சுத்தமாக கழுவி, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களை சார்ந்தவர்களுக்கும், அருகிலுள்ளவர்களுக்கும் கொரோனா தொற்றினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முனைவர் ஈ.நீலப்பெருமாள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பி.ராஜேஷ், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மதிவாணன் (சாமித்தோப்பு), சுடலையாண்டி (குலசேரன்புதூர்), முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் கண்ணன் (பஞ்சலிங்கப்புரம்), பாலமுருகன் (கரும்பாட்டூர்), கொட்டாரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தலைவர் சி.காட்வின் ஏசுதாஸ், செயலாளர் ஏ.ரவீந்திரன், பெருமாள்புரம் ஊர்த்தலைவர் ராஜதுரை, சந்திரசேகர், ஐ.குமார், தாமரைதினேஷ், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.