தற்போதைய செய்திகள்

மியான்மர் நாட்டில் மீட்கப்பட்ட 8 சென்னை மீனவர்கள் தாயகம் திரும்பினர் – அமைச்சர் டி.ஜெயக்குமார் வரவேற்பு

சென்னை

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை, சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வரவேற்றார்.

கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைபடகுகளில் மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமானார்கள். இதனையடுத்து, தமிழக மீன்வளத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பற் படை ஆகியவற்றின் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது.

மேலும், இந்திய தூதரகம் மூலமாக மியான்மர், தாய்லாந்து மற்றும் வங்கதேசம் கடற்பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்றது. இந்த நிலையில், மியான்மர் கடல்படையினரால் மீட்கப்பட்ட 8 தமிழக மீனவர்களை அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது. அதன் விளைவாக, மீட்கப்பட்ட 8 மீனவர்களும் நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சால்வை அணிவித்து, புதிய உடைகளை கொடுத்து, சொந்த பணத்தில் போக்குவரத்து வசதிகளை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.உடன் மீன்வளத்துறை இயக்குநர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.