சிறப்பு செய்திகள்

பழங்குடியின மக்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், சாடிவயல்பதி பகுதியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வயலில் இறங்கி நெல் நாற்று நட்டார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்க கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருகை தந்திருந்தார். அப்போது கோயம்புத்தூர் மாவட்டம், சாடிவயல்பதி பகுதியில் வந்துகொண்டிருந்த போது அங்கிருந்த பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகள் ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பழங்குடியின மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அவர்களுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வயலில் இறங்கி நெல் நாற்று நட்டார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்கு பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பலமடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார்.

முதலமைச்சரின் உத்தரவின்படி, வேளாண்மைத்துறை மூலம் குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான குறைந்த வயதுடைய சான்று நெல் ரக விதைகளை அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் முன்கூட்டியே இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகித்து வருகிறது. மேலும், தேவையான ரசாயன உரங்களை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் கடைகளில் இருப்பு வைத்திடவும், விவசாயிகளுக்கு உரங்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசின் இத்தகைய நடவடிக்கைகளினால், விவசாயிகள் நாற்றங்கால் மற்றும் நடவுப் பணிகளை முன்னதாகவே தொடங்கி, பாசன நீரை முழுமையாக பயன்படுத்தி நெல் நடவு மேற்கொள்ள வழிவகுக்கப்பட்டுளள்ளது. 2020-21ம் நடப்பு நிதியாண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் டிராக்டர், நெல் நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் எந்திரம், பவர் டில்லர், களை எடுக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி, கொத்துக்கலப்பை, சுழற்கலப்பை மற்றும் தென்னை மட்டைகளை தூளாக்கும் கருவிகள், சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 56 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட, அதிகபட்ச மானியமும், வேளாண்மை எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க தனிப்பட்ட விவசாயிகள் அல்லது விவசாய குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், மானியமும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு துரிதமாக கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்கான திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சாடிவயல்பதி, மலைவாழ் பகுதியில் மின்கலன்வேலி அமைப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.23,000 வழங்கினார்.