சிறப்பு செய்திகள்

குருதியில் உறுதி கலந்து உழைப்போம் கோட்டையில் புது வரலாறு படைப்போம் – கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் உருக்கமான கடிதம்

சென்னை

முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு விழி கசியும் நீரோடு நன்றி. தி.மு.க போல் கழகத்தில் வம்சாவளி அரசியல் கிடையாது. உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானே சாட்சி. ஒற்றுமையால் அரண் அமைப்போம். ஓர் குரலால் அணி வகுப்போம். குருதியில் உறுதி கலந்து உழைப்போம். புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம் என்று கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் அன்புத் தொண்டர்களாகிய கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பான வணக்கம். ஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி, பூத்து குலுங்குகிற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.

உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமைச் சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.

எண்ணியது செய்திடல் வேண்டும், எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும், நீதிக்கு தலைவணங்கி நடக்க வேண்டும், நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும் என்னும் உயரிய லட்சியங்களை உள்ளத்தில் கொண்டு, புரட்சித் தலைவர் அவர்கள் தன் உதிரத்தின் ஈரத்தில் விதையூன்றிய இயக்கத்தில் ஒரு கடைக்கோடி தொண்டனாக அன்று என் அரசியல் வாழ்வை தொடங்கிய இந்த விவசாயியை, ஊர் நின்று பார்க்கும் அளவுக்கு, உச்சத்துக்கு அழைத்து வந்தது, நான் தினந்தோறும் பூஜித்து வணங்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனிவுக் கரங்கள் தான்.

அந்த தெய்வத் தாய், எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கழகம்தான் தமிழகத்தை ஆளும் என புனிதமிக்க சட்டப் பேரவையில் தன் கடைசி சூளுரையாய் விடுத்துப் போன சபதத்தை முன்னெடுத்து நிறைவேற்றி முடிப்பதற்கு, என்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், கழகமே உலகமென வாழும் கழக உடன்பிறப்புகளுக்கும், இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

வெறும் எழுத்துக்களால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்று விடாது. 2021-லும் மூன்றாம் முறையாக ஆட்சியைத் தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்பது சத்தியம். “என் மக்கள் எதற்காகவும், யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன்”

என்னும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவை நனவாக்கிக் காட்டுகிற கடமை நம் முன்னே காத்திருக்கிறது.
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்னும் மா தவத்தால் வாழ்ந்து முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் மூன்றாம் பெரும் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முடிசூட்டிய அந்த தெய்வத் தாயின் லட்சியங்களை இம்மி பிசகாது நிறைவேற்ற வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

அம்மா விட்டுச் சென்ற அரசாட்சியை எப்படி உங்களின் நல் ஆதரவோடு இந்தியாவே பாராட்டும் பொற்கால ஆட்சியாக, ஓயாத உழைப்பால் நாம் உயர்த்திக் காட்டினோமோ, எப்படி ஒட்டு மொத்த செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி விகிதங்களுக்காக இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழகம் என்கிற பெருமையை மத்திய அரசின் விருதுகளால் நாம் நிலைநாட்டி இருக்கிறோமோ, அந்த பொற்காலத்தை மீண்டும் உருவாக்கி சரித்திரம் படைத்திடுவோம்.

காவேரி உரிமையை மீட்டது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை தொடங்கி அரை நூற்றாண்டு கனவுக்கு உயிர் கொடுத்திருப்பது, ஆனைமலை – நல்லாறு திட்டம், காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களால் ஏரோட்டும் உழவினத்தின் நீரோட்டம் பெருக்கி வருவது, நீர் நிலைகளை மீட்டெடுக்க குடிமராமத்து திட்டம், இலவச வண்டல் மண் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருவது, மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி விவசாயிகளுக்கு பதினெட்டு மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கி வருவது, மீத்தேன் அபாயத்திலிருந்து விளை நிலங்களை காத்தது, இரண்டாம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி சுமார் மூன்று லட்சம் கோடி உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீடுகளை தாய்தமிழ் மண்ணுக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது, மேலும் அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று திரைகடலோடி தேன்தமிழ் பூமிக்கு திரவியம் தேடியது,

இவற்றுடன் உலகளாவிய ஏற்றுமதிக்கு உகந்த சூழல் நிலவும் மாநிலங்களில் தமிழகத்தை முன்னேற்றி இருப்பது,
தனிநபர் வருமானத்தில் தமிழகத்தை மேம்படுத்தியிருப்பது, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பது, கொரோனா காலத்திலும் சிறப்பான பணி செய்து மக்களை காத்தது, என்றெல்லாம் அளப்பரிய தொண்டுகளை நாம் ஆற்றியிருக்கிறோம்.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து, தமிழகத்தை இந்தியாவின் மருத்துவ தலைநகராக உயர்த்தி இருப்பது, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவ கல்வி ஒதுக்கீட்டில் 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிட நடவடிக்கை எடுத்ததின் மூலம் சாதனைகளால் நாம் தோரணம் கட்டியிருக்கிறோம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது, 1,000 கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்காவை உருவாக்கி வருவது, புதிதாக 6 சட்டக் கல்லூரிகளையும், இரண்டு கால்நடை மருத்துவ கல்லூரிகளையும் உருவாக்கி சரித்திரம் படைத்துள்ளோம். சாதி, மத பூசல்களை இல்லாது சட்டம், ஒழுங்கை அமைதியோடு பராமரித்து, இந்தியாவே வியந்து போற்றும் இணையற்ற மாநிலமாக தமிழகத்தை வழிநடத்தி வருகிறோம். இப்படி நெஞ்சு நிமிர்த்தி நாம் புரிந்திருக்கும் சாதனைகளை, தொண்டூழியங்களை, தமிழக மக்களிடம் பெருமிதத்தோடு எடுத்துரைக்கும் வாய்ப்பை உங்கள் அன்புச் சகோதரனாகிய எனது தலைமையிலான அரசு நேற்றும், இன்றும் வழங்கியிருக்கிறது.

இதனை நற்றமிழ் பூமிக்கு நாளைக்கும் வழங்கிட, மக்களின் உயரிய வாழ்வுக்கு பொலிவு சேர்த்து இந்தியாவின் தலையாய மாநிலம் தமிழகம் என்கிற தலைப்பாகையை தமிழ்தாய்க்கு நிரந்தரமாய் சூட்டிட இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்று இல்லங்கள் தோறும் வாக்காளர்களிடம் சென்று உரிமையோடு ஓட்டு கேட்கும் வாய்ப்பை உங்கள் விவசாயி வழிநடத்தும் அரசு, உங்களுக்கு வழங்கியிருக்கிறது என்பதை நான் மெத்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஆற்றி வரும் தொண்டும், சேவையுமே மக்களின் இதயங்களில் நமக்கான இடத்தை உருவாக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

பழி பாவங்களுக்கு அஞ்சுபவனாக, கழகத்தின் பெருமைக்கும், புகழுக்கும் மட்டுமே ஆசைபடுபவனாக, உங்கள் அன்புச் சகோதரனாக நான் உழைத்து வருகிறேன். இந்த இயக்கம் என்னைப் போன்ற லட்சோப லட்சம் எளியோருக்கெல்லாம் பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை தந்த பாசப் பேரியக்கம். இங்கே, அப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளு பேரன் என்கிற வம்சாவளி அரசியல் கிடையாது.

உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை போதித்த புரட்சித் தலைவரின் வழிநடக்கும் கழகத்தில் உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் ஒரு சாட்சி. எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களின் உண்மைத்தன்மையை உரசிப் பார்த்து அவற்றில் உள்ள ஆக்கப்பூர்வங்களை நாம் ஏற்றுக் கொள்பவர்கள். அதே வேளையில் வழிசொல்ல மாட்டோம்; பழி மட்டுமே சொல்வோம் என்கிற உள்நோக்கத்திலான காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை நாம் கடந்து செல்லக் கூடியவர்கள்.

நமது இலக்கும், நமது லட்சியமும் மக்களின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மட்டுமே உரியது. இதனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் நம்மை தமிழக மக்கள் உளமார ஆதரிக்கிறார்கள். நாளையும் ஆதரிப்பார்கள்.
எனவே, நம்பிக்கையோடு நம் பாதங்களை முன்வைப்போம், பயணத்தை முன்னெடுப்போம்.

“நாளைத் திருநாடு நமதடா, நாம் இனிமேல் தோளை சதைச்சுமையாய் தூக்கித் திரியோமே” என்னும் திடத்தோடும், தீர்க்கத்தோடும் பாடுபடுவோம். பெட்டிப் பணத்தை கொட்டி வைத்துக்கொண்டு இரக்கமற்ற அரக்கத் தனத்தோடும், இரவல் மூளைகளோடும் அதிகாரப் பித்துப் பிடித்து அலைவோரை வென்றெடுக்க ஒற்றுமையாய் அரண் அமைப்போம். ஓர் குரலாய் அணி வகுப்போம்.

“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்னும் புரட்சித் தலைவரின் பொன்மொழிகளை மனதில் ஏற்று தினம் பாடுவோம். வழியெங்கும் வாகை நமக்காகக் காத்திருக்கிறது. திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது. இதற்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்.
2021-லும் புரட்சித் தலைவி அம்மாவின் லட்சிய அரசை புனிதஜார்ஜ் கோட்டையிலே மீண்டும் படைப்போம்.

அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் ஓங்குக!
நன்றி, வணக்கம்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.