சிறப்பு செய்திகள்

தொல்லியல் படிப்புக்கான தகுதியில் தமிழையும் சேர்க்க வலியுறுத்தல் – பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம்

சென்னை

தமிழ்மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதியில் தமிழ்மொழியையும் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய தொல்லியில் துறையின் பட்டய படிப்பில் சேர கல்வித்தகுதியாக தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும். பல மொழிகளின் 48 ஆயிரம் பழங்கால கல்வெட்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டயபடிப்பில் சேர்வதற்கு, சமஸ்கிருதம் பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகள் போன்றவை குறைந்த பட்ச தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் முதுகலை தொல்லியல் துறை பட்டய படிப்பிற்கான குறைந்த பட்ச தகுதியில் தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும். 2004ம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் தற்போது புறக்கணிக்கப்பட்டு உள்ளது வேதனையளிக்கிறது. தமிழ்மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்க தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.