கொரோனா தடுப்பு-நிவாரண பணிகளுக்கு ரூ. 339.93 கோடி நிதி – நன்கொடையாளர்களுக்கு, முதலமைச்சர் நன்றி

சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 21.7.2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 22.7.2020 முதல் 7.10.2020 வரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் வருமாறு:-
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் 1 கோடி ரூபாய், KALS குருப் ஆப் கம்பெனிஸ், சென்னை 1 கோடி ரூபாய்.Induslnd Bank Limited 95.95 லட்சம் ரூபாய், நீதித்துறை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் 49 லட்சத்து 56 ஆயிரத்து 851 ரூபாய், இராம.ராமநாதன், சேர்மன், கும்பகோணம் மியூட்சுவல் பெனிஃபிட் ஃபண்ட் நிதி லிமிடெட், கும்பகோணம் 25 லட்சம் ரூபாய், கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாராத்தான் 2020 சார்பில் 23 லட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய், டெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை 10 லட்சம் ரூபாய். 7.10.2020 முடிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும்.
மேற்கண்ட நாட்களில் நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.