தற்போதைய செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவு – முதலமைச்சர் இரங்கல்

சென்னை

சுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் 7.10.2020 அன்று உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய வீரர்களில் ஜெயவீரன் குறிப்பிடத்தக்கவர். அவரது தாயார் அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையிலிருந்த போது ஜெயவீரன் பிறந்துள்ளார். அஞ்சலை அம்மாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை முருகப்படையாச்சியும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். இவருடைய குடும்பம் முழுவதுமே நாட்டிற்காக பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.