தற்போதைய செய்திகள்

நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் 20 நாட்கள் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் கால்வாய் பாசன விவசாயிகள், கால்நடை தேவைகளுக்காகவும் நிலத்தடி நீர் உயரவும் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் இருப்பை கணக்கில் கொண்டு, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் கால்வாயிலுள்ள 19403.70 ஏக்கர் பாசன பகுதிகளுக்கும், கால்நடை தேவைகளுக்காகவும், நிலத்தடி நீர் உயரவும் சிறப்பு நனைப்பிற்காக, நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து 9.10.2020 முதல் 28.10.2020 வரை உள்ள காலத்தில் முறைவைத்து 20 நாட்களுக்கு மிகாமல் 224.64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.