தற்போதைய செய்திகள்

கழக அரசின் திட்டங்களால் பெண்களின் வாழ்வு உயர்வு – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதம்

நாகப்பட்டினம்

கழக அரசின் திட்டங்களால் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதத்துடன் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.18 லட்சம் மானியத்துடன் 72 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான மானிய நிதி விடுவிப்பு ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஏழை எளிய வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் நலனில் அக்கறை கொண்டு அம்மா அவர்களின் வாக்குறுதியின்படி “பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டம்” (மானியத்துடன் கூடியது) தமிழக அரசால் ரூ.25000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

சமுதாய அமைப்புகள் வணிக நிறுவனங்கள் அரசு உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றில் தினக்கூலி தொகுப்பூதியம் ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் நீண்ட தூரம் பயணம் செய்து தங்கள் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் பொருள் ஈட்டும் முக்கிய வருவாய் ஆதாரமாக திகழக்கூடிய ஓட்டுநர் உரிமம் உள்ள 18 முதல் 45 வயதுக்குட்பட்ட மகளிர் இத்திட்டத்தின் விதிகளுக்குட்பட்டு பயன் பெற ஏதுவாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மகளிரை குடும்பத் தலைவியாக கொண்ட குடும்ப உறுப்பினர்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் எல்லாம் ஒரு காலத்தில் மிகுந்த கட்டுபாடுகளுடன் இருந்து வந்தனர். தற்போது ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை உருவாகியுள்ளது. அம்மா அவர்கள் தொடங்கிய தொட்டில் குழந்தை திட்டத்தில் வளர்ந்த பெண்கள் இன்று அரசுப் பணிகளில் மட்டுமல்லாமல், தனியார் பணிகளில் தங்களது திறமையை பயன்படுத்தி மேலோங்கி வளர்ந்து இருக்கிறார்கள். அம்மா அவர்கள் பெண்களுக்கு தாயாக இருந்து அனைத்து விதமான திட்டங்களையும் வழங்கி இருக்கிறார். உதாரணமாக சமுதாய வளைகாப்புத் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மகப்பேறு காலத்தில் நிதியுதவி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய திட்டங்களாகும்.

அம்மா அறிவித்த திட்டங்களுக்கு தாராளமாக நிதி ஒதுக்கி அம்மாவின் திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். சுய உதவிக்குழு மூலம் வழங்கப்படும் கடன்களை பெண்களாகிய நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு தானும் வளர்ந்து நாட்டையும் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.கிரிதரன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், சோழன், ஒன்றிக்குழு துணைத்தலைவர் அறிவழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், ராஜூ மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.