தற்போதைய செய்திகள்

16 பெண் குழந்தைகளுக்கு முதிர்வுத் தொகை – அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா வழங்கினர்

நாமக்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் 16 பெண் குழந்தைகளுக்கு முதிர்வுத்தொகையை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் 16 பெண் குழந்தைகளுக்கு ரூ.7,97,821-க்கான முதிர்வுத்தொகை காசோலைகளை வழங்கினர்.

மேலும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அமைச்சர்கள் கேடயங்களை வழங்கினர்.

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்றுக்கொண்ட பயனாளியின் குழந்தையின் பெயரில் தமிழ்நாடு அரசினால் ரூ.50,000 ம், 2 பெண் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொண்ட பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25,000 மும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேசனில் முதலீடு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட பெண் குழந்தை 18 வயதையடையும்போது முதிர்வுத் தொகை வரைவோலையாக வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 2020ம் ஆண்டில் பெண் குழந்தை திட்டத்தின் கீழ் பதிவு செய்த 166 பெண் குழந்தைகளின் பெயரில் மொத்தம் ரூ.41,50,000 பவர் பைனான்ஸ் கார்ப்பரேசனில் முதலீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன், கழக பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி, காவல் கண்காணிப்பாளர் ச.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.சித்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.