தற்போதைய செய்திகள்

1,969 பயனாளிகளுக்கு ரூ.2.60 கோடி நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,302 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளும், காரிமங்கலம் வட்டத்தில் 667 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 1,969 பயனாளிகளுக்கு ரூ.2.60 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.கார்த்திகா தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 1021 நியாயவிலைக் கடைகளும், (முழுநேர நியாயவிலைக் கடைகள் 492, பகுதிநேர நியாயவிலைக் கடைகள் 569) 9 மகளிர் நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் 41 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1069 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் தருமபுரி மாவட்டத்தில் தான் அதிக அளவில் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. 632 குடும்ப அட்டைகளுக்கு சர்க்கரை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த குடும்ப அட்டைதாரர்களும் அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ள தொடர்ந்து அரசு வாய்ப்பு வழங்கிவருகிறது. பாலக்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும 245 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.அதேபோன்று பாலக்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும 365 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 5793 மாணவர்களும், 7561 மாணவிகளும் என ஒட்டு மொத்தமாக 13354 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வரப்பெற்றுள்ளது.தற்போது திட்டம் துவங்கப்பட்டு தகுதியுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.