தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர்கள் நேரில் பாராட்டு

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 8 மாதமாக தீவிர கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள், வருவாய்த்துறை, குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கெரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து தன்னலம் பார்க்காமல் கடந்த 8 மாத காலமாக களப்பணி நடவடிக்கைகள் மேற்கொண்ட காரணத்தால் பல்வேறு மாவட்டங்களை விட நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தேவை தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் பேவர் பிளாக் சாலைகள், குடிநீர் திட்டப்பணிகள், அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ச.சக்தி கணேசன், கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன், கழக பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா ராஜூ, நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் உள்பட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.