தற்போதைய செய்திகள்

கழுகுமலையில், ரூ.6.71 கோடியில் புதிய சாலைகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பூமி பூஜை

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் கழுகுமலையில் 5 பகுதிகளுக்கான ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் இச்சாலைகள் ரூ.6.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகளுக்கான துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலையில் கழுகுமலை – நாலாட்டின்புதூர் சாலையில் இருந்து கே.வெங்கடேஸ்வரபுரம் சாலை, கழுகுமலை – நாலாட்டின்புதூர் சாலையிலிருந்து கே.சுப்பிரமணியபுரம் சாலை, வேலாயுதபுரம் சாலையில் இருந்து கழுகாசலபுரம் புதூர் சாலை, கே.வெங்கடேஸ்வரபுரம் சாலையில் இருந்து கே.துரைசாமிபுரம் சாலை, கே.துரைச்சாமிபுரம் சாலையிலிருந்து தர்மத்துப்பட்டி சாலை, கே.சுப்பிரமணியபுரம் சாலையில் இருந்து கழுகாசலபுரம் புதூர் சாலை ஆகிய கிராம சாலைகள் ஒன்றிய கட்டுபாட்டில் இருந்து நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இச்சாலைகள் அனைத்தையும் புதுப்பித்து புதிய தார்சாலைகளாக அமைக்க முதலமைச்சர் ரூ.6 கோடியே 71 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி சாலை அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பபணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தந்தமைக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

முன்னதாக கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் டி.என்.குளத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். எனவே அவரது மனைவி அபிராமி என்பவருக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், வீட்டுமனைப்பட்டா, வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயராணி, உதவி கோட்ட பொறியாளர் மேகனா, கழுகுமலை கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பசாமி, முக்கிய பிரமுகர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, கிரிராஜ், ராமச்சந்திரன், குருராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.