தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு அதிவேக இணையவசதி வழங்க தகவல் தொழில்நுட்பத்தில் 2 புதிய திட்டங்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை

மாணவர்களுக்கு அதிவேக இணையவசதி வழங்க தகவல் தொழில்நுட்பத்தில் 2 புதிய திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை காணொலிக்காட்சி மூலம் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மதுரை மாவட்டத்திலிருந்து இரண்டு தொழில்நுட்ப மாநாடுகளில் பங்கேற்று இருக்கிறோம். சுகி முன்னெடுத்து சென்றிருக்கிற Technology Enabled Growth and Opportunities (TEGO20202) International Conference and Exhibition தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விர்ச்சுவல் மாநாட்டினை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், எளிமையாக்குவதற்கும் அதன் மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சுகியோடு இணைந்து இந்த மாநாட்டில் பங்கெடுத்துள்ளோம். அதனைத் தொடர்ந்து பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது RAISE2020 என்கிற மாநாடு. உலகளவில் இருக்கக்கூடிய அனைத்து வல்லுநர்கள் அனைவரும் இம்மாநாட்டில் பங்கெடுத்துள்ளனர். இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவுத் திறனை உறுதி செய்கிறது.

செயற்கை நுண்ணறிவுத்திறனை பயன்படுத்துவதனால் நேரத்தை சேமிக்க முடியும். உதாரணமாக சென்னையில் உள்ள அரசுப்பள்ளியில் இந்த (Artificial Intelligence) கருவி நிறுவப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் நுழையும் போதே ஏற்கனவே இக்கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முக அடையாளங்களை வைத்து அவர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுவிடும். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையை வருகைப்பதிவேட்டில் பதிவு செய்ய ஆகும் காலவிரயம் தவிர்க்கப்படுகிறது.

அதேபோல விவசாயிகள் பயிர்களுக்கேற்படும் நோய் தாக்குதல்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் பொதுமக்கள் வானிலை குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும், சுகாதாரத்துறையிலும் இதன் செயல்பாடு சிறப்பாக உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் திட்டத்திற்காகவும், இணைய பாதுகாப்பு திட்டத்திற்காகவும் முதலமைச்சர் மூன்று பாலிசிகளை வெளியிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. இந்த கொரோனா தொற்று காலத்திலும் இரண்டு தொழில்கள் தடையின்றி நடைபெற்றது. விவசாயப் பணிகளுக்கு முதல் ஊரடங்கிலிருந்தே விலக்கு அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கு வீட்டிலிருந்தே பணி செய்யும் புதியமுறை உருவாக்கப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்ப பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெற்றது.

கிராம அளவிலிருந்து தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு Satillite Village மற்றும் Bharath Net ஆகிய திட்டங்கள் தற்போது முன்னேற்றப் பாதையிலுள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதலுடன் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பங்கெடுக்கும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12,524 கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் அதிவேக இணைய இணைப்பு கிடைக்கும். அம்மாவின் அரசு 65 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கியுள்ளது. அம்மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வசதி பெற்று பயனடைவார்கள். தகவல் தொழில்நுட்ப பூங்காக்களையும் நாம் மேம்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.