தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் கூடுதலாக 3 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு

புதிய பாடத்திட்டதால் அரசு பள்ளிகளில் கூடுதலாக 3 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, தூக்கநாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கரை கொடிவேரி ஊராட்சி மற்றும் பெரிய கொடிவேரி பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.5.08 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும், நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25,000 எனவும், இரண்டு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அவர்களுக்கு 18 வயது நிரம்பியவுடன் முதிர்வு பத்திரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் படித்த பட்டதாரி பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவியாக ரூ.50,000, 10ம் வகுப்பு வரை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவியாக ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது.

வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்கரை கொடிவேரி பகுதியில் 270 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் வரும் ஐனவரி மாதத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதில் ஒரு வீட்டின் மதிப்பு சுமார் ரூ.8.25 லட்சம் ஆகும். அக்கரைகொடிவேரி மக்கள் விடுத்த சாலை மற்றும் சாக்கடை வசதி வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அம்மா ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகள் செய்யவும், அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக ரூ.1,67,84,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பகுதிக்கு மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பெரிய கொடிவேரி பேரூராட்சியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வாரசந்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு, பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் புதிய பாடத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் 3 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் நடைபெற்ற நீட்தேர்வில் 180 வினாக்களில் 174 வினாக்கள் அதாவது 90 சதவிகிதம் வினாக்கள் புதிய பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசின் 7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீட்டின்படி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கே.நவமணி கந்தசாமி, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.