தற்போதைய செய்திகள்

செம்மொழி மாநாடு நடத்தி தமிழறிஞர்களை அவமானப்படுத்திய ஒரேகட்சி தி.மு.க. தான் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

மதுரை

செம்மொழி மாநாடு நடத்தி தமிழறிஞர்களை அவமானப்படுத்திய ஒரே கட்சி தி.மு.க. தான் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்கும் பணிகள், மழைநீர் உறிஞ்சு தொட்டிகள் அமைக்கும் பணிகள் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள் பழைமை மாறாமல் இருப்பதற்கும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையிலும், புராதனத்தை பாதுகாக்கும் வகையிலும் நான்கு சித்திரை வீதிகளில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் இவ்வீதிகளில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 148 எண்ணம் அலங்கார விளக்குகள் 15 மீட்டர் இடைவெளியில் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் நான்கு சித்திரை வீதிகளின் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். நான்கு சித்திரை வீதிகளில் அமைக்கப்பட்டு வரும் அலங்கார விளக்குகள் வருகின்ற தீபாவளிக்குள் பொருத்தப்பட்டு ஒளிர வைக்கப்படும்.

மேலும் மழைநீர் கோயிலுக்குள் செல்லாத அளவிற்கு 30 மீட்டர் மழைநீர் உறிஞ்சு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் சீராக நேரடியாக வைகை ஆற்றில் செல்லும் அளவிற்கு பாண்டியர் மன்னர்கள் காலத்தில் இருந்த மழைநீர் வடிகால் முறை தற்போது செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்திரை வீதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும். இந்தியாவிலேயே தூய்மையான ஆலயமாக மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் ஆலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் ஒவ்வொரு பணிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்கள் மூலம் உரிய சான்று அளிக்கப்பட்டு வெளிப்படையாக அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதால் எதிர்க்கட்சியினர் குறை கூறி வருகிறார்கள். அடுத்தவர்கள் மீது குறை சொல்வதே எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஒவ்வொரு வாரமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குறைகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு வணிகர்கள் மற்றும் வர்த்தகம் பாதிக்காத வகையில் ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், மாரட் வீதிகள், வெளி வீதிகள் ஆகிய வீதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் வருகிற 15-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின் இதர பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

திமுக செம்மொழி மாநாடு என்கிற பெயரில் குடும்ப மாநாடு நடத்தியது. தமிழ் அறிஞர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல் கீழே அமர வைத்து அவமரியாதை செய்தது. தமிழுக்கு முதல்வர் முன்னுரிமை கொடுத்து வருகிறார். பிரதமர் தமிழின் பெருமை குறித்து இந்தியா முழுதும் பேசி வருகிறார். வெளி மாநிலங்களில் தமிழை நடைமுறைக்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தலித் ஊராட்சி மன்ற தலைவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். தலித் ஊராட்சி தலைவருக்கு அனைத்து உரிமைகளும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் பி.எஸ்.மணியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஜெ.ராஜா, செயற்பொறியாளர்கள் சேகர், முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.