தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகத்தால் முன் மாதிரி மாநிலமாக தமிழகம் உயர்வு – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மகிழ்ச்சி

திண்டுக்கல்

முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகத்தால் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பொன்மாந்துறை ஊராட்சி, சிந்தலக்குண்டு கிராமத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் திண்டிமாவனம் ஆகியவை இணைந்து அடர் குறுவனம் எனும் மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் நிறைய மரங்கள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி முன்னிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நீரின்றி கடுமையான வறட்சியான மாவட்டமாக இருந்ததை அறிந்து, நத்தம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார். அம்மா அவர்கள் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் தேவை குறித்து நான் கூறியபோது, முதலமைச்சர் உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து, திண்டுக்கல் நகர் மற்றும் கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறும் வகையில் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை அறவே நீக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகத்தினால் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. எதற்கெடுத்தாலும் குறை சொல்ல சிலர் உள்ளனர். தமிழக மக்கள், நல்லதை எவர் செய்கிறார் என்பதை அறிந்துள்ளனர்.

குழப்பம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 7-ந்தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை அறிவித்துள்ளார். அன்னப்பறவை எவ்வாறு, தண்ணீரில் இருந்து பாலை மட்டும் பருகி தண்ணீரை எப்படி விட்டுவிடுமோ அதுபோன்று பொதுமக்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நல்ல திட்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிந்தலக்குண்டு கிராமத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ள 23 ஏக்கர் நிலப்பரப்பளவில் 3 ஏக்கர் பரப்பில் முதற்கட்டமாக குறுவனத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி முறையில் 22,000 முதல் 24,000 வரை மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஏக்கருக்கு 4,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படவுள்ளது. இதனை பராமரிப்பதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் பணியாட்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி இத்திட்டத்திற்கு தேவையான திடக்கழிவுகள் மற்றும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டிமாவனத்தினர் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். குறிப்பாக எம்.வி.முத்தையா அரசு மகளிர் கல்லூரியில் உள்ள எம்.வி.எம். திண்டிமாவனம் தாவரவியல் பூங்காவில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இரு மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்கி உள்ள திண்டிமாவனம் அமைப்பினர் தற்போது சிந்தலகுண்டு கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தில் குறுங்காடுகளை உருவாக்கும் மகத்தான பணியினை மேற்கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ச.வித்யா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதிமுருகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் மற்றும் திண்டிமாவனம் குழுவினர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.