தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.358 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.358 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றி வரும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் 5 பகுதி நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 2 நகரும் நியாய விலைக்கடைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஆ.தணிகாசலம் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

நியாயவிலைக் கடைகளுக்கு முன்பு தாய்மார்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு புதிய நியாய விலைக் கடைகளை தொடங்கி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2005ம் ஆண்டு நியாய விலைக்கடைகளை தொடங்குவதற்கான வரைமுறைகளை தளர்த்தி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் புதிய அரசாணையை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் வெளியிட்டார்.

இதனடிப்படையில் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் எவ்வித தங்குதடையின்றி பொருட்களை வாங்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1069 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் தருமபுரி மாவட்டத்தில் தான் அதிக அளவில் நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவக்கிட முதலமைச்சரால் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் 13,384 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 118 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் துவங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டு 44,637 விவசாயிகளுக்கு ரூ.314.12 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கு ரூ.325 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 17562 விவசாயிகளுக்கு ரூ.136.54 கோடி பயிரக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன் தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7 சதவீத வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று மக்களின் தேவைகள் அறிந்து திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றி வரும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசிற்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.