தற்போதைய செய்திகள்

திருப்பூரை முன்னோடி மாவட்டமாக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

திருப்பூர்

அரசின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி திருப்பூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ செய்ய வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை திட்டப் பணிகளின் வளர்ச்சி குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

மறைந்தும் மறையாமலும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். மேலும் முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் படி, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பு பணியில் முழு பங்களிப்புடன் ஈடுபட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். மேலும், தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளும் மற்றும் அரசின் நலத்திட்டங்களும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு திருப்பூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்த கூட்டத்தின் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தங்கு தடையுமின்றி கிடைத்திட வழிவகை மேற்கொள்ள வேண்டுமெனவும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.