சிறப்பு செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்

சென்னை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

ஏழுமலையானை தரிசனம் செய்ய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். முதலில் கீழ் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார். தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார்.

உடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், டாக்டர் வெ.சரோஜா ஆகியோரும் தரிசனம் செய்தனர். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தீர்த்த பிரசாதங்களை பெற்று, வேத பண்டிதர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

இதனையடுத்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தும், அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இறுதியாக சடகோப ராமானுஜ பெரிய ஜீயரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். பெரிய ஜீயர் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து கீழ் திருப்பதியில் உள்ள 5 ஆயிரம் ஆண்டு பழமையான கைலாய ஈஸ்வர் கோயிலில் துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்தை முடித்து விட்டு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மாலை சென்னை திரும்பினர். வரும்வழியில்துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆந்திர மாநிலம் நகரியிலும், திருத்தணி புதூர் பகுதியில் கழகத்தினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.