தற்போதைய செய்திகள்

எலக்ட்ரானிக் தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு மிகப்பெரிய வரப்பிரசாதம் – அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

கடலூர்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ள எலக்ட்ரானிக் ஹார்டுவேர் தொழில் கொள்கையால் எலக்ட்ரானிக் ஹார்டுவேர் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக தமிழ்நாடு அமைந்துள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத்
பெருமிதத்துடன் கூறினார்.

கடலூர் மத்திய மாவட்டம் கடலூர் நகர கழகத்தின் சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி கழக மத்திய மாவட்ட அலுவலகம் பாதிரி குப்பத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எம்ஜிஆர் என்கிற இராமச்சந்திரன், பொருளாளர் எஸ்.தனசேகரன், நகர துணை செயலாளர் வ.கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை படிவத்தை கடலூர் நகராட்சியில் உள்ள 45-வது வார்டு பொறுப்பாளர்களுக்கும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த செப்டம்பர் 7-ந்தேதி எலக்ட்ரானிக் ஹார்டுவேர் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் அறிவித்தார். இதில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு அதிக அளவில் தொழில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் போன்ற வகைகளில் ஏ.பி.சி என்று மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளோம்.

இதில் ஏ பிரிவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் கோவை, கிருஷ்ணகிரி, கடலூர், கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சி பிரிவில் தர்மபுரி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.

அதேபோன்று எலக்ட்ரானிக் தொழில் முதலீட்டாளர்களை இரு பிரிவுகளாக பிரித்துள்ளோம். ரூபாய் 200 கோடி முதல் ரூபாய் 500 கோடி வரையிலான முதலீட்டாளர்கள் லார்ஜ்-ஸ்கேல் முதலீட்டாளர்களாகவும் , 500 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்கள் மெகா ஸ்கேல் முதலீட்டாளர்களாகவும் பிரித்துள்ளோம்.

லார்ஜ்-ஸ்கேல் முதலீட்டாளர் ஏ பிரிவு மாவட்டங்களில் முதலீடு செய்தால் அவருக்கு 15 சதவீதமும், பி பிரிவில் 20 சதவீதமும் , சி பிரிவில் 25 சதவீதமும் முதலீட்டு மானியமாக வழங்குகிறோம். அதேபோல் மெகா ஸ்கேல் பிரிவில் வரும் முதலீட்டாளர்கள் ஏ பிரிவிற்கு 18 சதவீதமும், பி பிரிவிற்கு 24 சதவீதமும், சி பிரிவிற்கு 30 சதவீதமும் மானிய சலுகை வழங்குகிறோம்.

இங்கு முதலீடு செய்யும் தொழில் முதலீட்டாளர்களுக்கு நிலமதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்குகிறோம். மேலும் அவர்களுக்கு முத்திரைதாள் கட்டணம் இல்லாமல் நிலங்கள் பதிவு செய்யப்படும். எலக்ட்ரானிக் ஹார்டுவேர் தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் பேருக்கு எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் திறன் மேம்பாட்டு பயிற்சியை அரசே வழங்க முடிவு செய்துள்ளது. ஆறு மாதத்திற்கு வழங்கப்படும் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆண்களுக்கு ரூ.4 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.6 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் அதிக அளவில் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. கொரோனா காலத்திலும் தமிழக தொழில்துறை முன்னேற்றப் பாதையில் உள்ளது.

தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம் உள்ளிட்டவை அதிகமாக இருப்பதால் இந்திய அளவில் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளது. கடலூரில் 125 ஏக்கர் நிலம் சிப்காட் கையிருப்பில் உள்ளது. அங்கு காலணி தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கே.காசிநாதன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிசாமி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஏ.கே.சுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் ஆர்.மாதவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் அன்பு, தமிழ்ச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.