தற்போதைய செய்திகள்

ஜப்பான் நாட்டு நிதியுதவி கிடைத்தவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி விரைவில் தொடக்கம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்

மதுரை

ஜப்பான் நாட்டு நிதியுதவி கிடைத்தவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை கொடிமங்கலம் நாகதீர்த்தம் வைகை ஆற்று பகுதியில் ரூ.17.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் தலைமையில், ஆணையாளர் ச.விசாகன் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

மதுரை மக்களின் கோரிக்கையான தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு முதலமைச்சரால் அறிவித்த முல்லை பெரியாறு அணையிலிருந்து 24 மணி நேரமும் குடிநீர் கொண்டு வருவதற்கு வழிவகைகளை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் உத்தரவின்படி 48 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு உள்ளது.

அதேபோன்று வைகை அணையை தூர்வாரும் பணியும் கடந்த ஆண்டே மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் கடந்த ஆண்டு அதிக மழை பெய்து வைகை அணையில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதால் வைகை அணையின் தூர்வாரும் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. மாடக்குளம் கண்மாயில் ஏற்கனவே செல்கின்ற தண்ணீர் தொடர்ந்து செல்லும் தடுப்பணை கட்டுவதன் மூலம் மேலும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்.

அருகில் உள்ள தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் வரைக்கும் உபரி தண்ணீர் செல்லும் அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் எப்போது எல்லாம் தண்ணீர் வருகிறதோ அப்போது எல்லாம் இந்த தடுப்பணையின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அந்த பகுதி செழிப்பாகவும், குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை உருவாக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஜப்பான் நாட்டு நிதியுதவி கிடைத்தவுடன் பணிகள் விரைவில் துவங்கப்படும். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்படும் பேருந்து நிறுத்துமிடம் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்படும். இதர கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள் கருத்தப்பாண்டியன், அலெக்ஸ்சாண்டர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.