தற்போதைய செய்திகள்

அறிவு என்ற விவேகத்துடன் மாணவர்களுக்கு “வீரம்” என்ற உடல் திறன் அவசியம் தேவை – அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவுரை

திருவாரூர்,

மாணவர்களுக்கு அறிவு என்ற விவேகத்துடன் வீரம் என்ற உடல் திறன் அவசியம் தேவை என்று அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவுரை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சிலம்பம் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது. நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆசைமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாலன், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர் ராம.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உடல் ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கற்க எடுக்கும் முயற்சிகளைப்போல் உடல் திறன் வளர்க்கும் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிவு என்ற விவேகத்துடன் வீரம் என்ற உடல்திறனும் முக்கியம். அதனை உணர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு விவேகத்துடன் கூடிய வீரத்தையும் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.