தற்போதைய செய்திகள்

வாங்கலில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் உரிய நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

கரூர்

வாங்கலில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் எல்.என்.சமுத்திரம் மற்றும் குப்புச்சிப்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 136 நபர்களுக்கு ரூ.80.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

கிராமப்புறங்களின் பொருளாதாரத்திற்கு முக்கிய அங்கமாக விளங்குவது கூட்டுறவு. கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அம்மா அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் ஊக்கப்படுத்தி அனைத்து கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை கணினி மயமாக்கி விவசாயிகளுக்கு போதுமான கடனுதவிகளை வழங்கி வந்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.11 ஆயிரம் கோடி வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் தகுதியுடைய அனைவருக்கும் கடனுதவிகள் வழங்கப்படுகின்றது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்த அரசு அம்மா அவர்களின் அரசு. வாங்கலில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வகையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து பிளாஸ்டிக் தனியாக பிரித்தெடுக்கும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் அதிநவீன கருவிகள் வரவழைக்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எ.ஆர்.காளியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பாலமுருகன், மார்கண்டேயன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சிவசாமி, அம்மையப்பன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கமலக்கண்ணன், என்.எஸ்.கிருஷ்ணன், சு.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.