தற்போதைய செய்திகள்

கழகம் மீண்டும் வெற்றி பெற்று `ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி

வேலூர்

கழகம் மீண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.சம்பத்குமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.செந்தில்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முனுசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுள கந்தன், பொதுக்குழு உறுப்பினர் பூங்குளம் மகேந்திரன், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தனஞ்செயன் ஆகியோரை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.சம்பத்குமார் தலைமை தாங்கினார் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்ட கழக துணைச்செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீல் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

நமது இயக்கமானது ஐம்பது ஆண்டுகள் முடிந்து வெற்றிகரமாக மக்கள் பணி செய்யும் இயக்கமாக திகழ்கிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தொடங்கிய போது 18 லட்சம் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒன்றரைக்கோடி தொண்டர்கள் உறுப்பினர்களாக உள்ள இயக்கமாக மாற்றினார். நூறு ஆண்டுகளானாலும் கழகம் என்ற பேரியக்கம் தான் தமிழகத்தில் மக்கள் பணி செய்யும் என்று அம்மா அவர்கள் நமது இயக்கத்திலுள்ள விசுவாசமிக்க தொண்டர்களை நம்பி தான் சட்டமன்றத்தில் பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப்பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும். கழகத்தின் உண்மையான தொண்டர்கள் உள்ளவரை இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது. தமிழகத்தில் கழக ஆட்சி தொடர மக்கள் விரும்புகின்றனர். கழக தொண்டர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் வீண்போகாது. உழைக்கும் தொண்டர்களை தக்க தருணத்தில் தலைமையில் அடையாளம் காட்டி அவர்களுக்கு உயர்ந்த பதவிகளை வழங்குவோம்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் கோ.மா.புஷ்பநாதன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.செல்வம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டிடிசி.சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகேந்திரன், நகர கழக செயலாளர் ஜி.சதாசிவம், பேரூராட்சி கழக செயலாளர்
டி.பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜெயசக்தி, சீனிவாசன், பாரதிதாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர் நிலோபர்கபீல் ஆகியோர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.சம்பத்குமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.